கருப்பை வாய் புற்றுநோய் என்பது பெரும்பாலும் தவிர்க்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும். கருப்பை வாய்ப்பகுதிப் புற்றுநோயில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனையை முறையாகச் செய்துகொள்வதே ஆகும்.
கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை என்றால் என்ன?
கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனையானது, உங்கள் கருப்பை வாயின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்கிறது. ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் உங்கள் கருப்பை வாயில் இருந்து ஒரு சிறு பஞ்சைக் கொண்டு சிறு மாதிரியை எடுப்பார்கள் - பாப் ஸ்மியர்(pap smear) போன்று - அதில் ஹியூமன் பாபிலோமாவைரஸ் (HPV) இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள்.
HPV என்பது, உங்கள் கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள உயிரணுக்களை மாற்றக்கூடிய ஒரு பொதுவான வைரஸ் ஆகும். இதுவே கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் மிகப் பொதுவான காரணியாகும்.
HPV-ஐக் கொண்ட பெரும்பாலானோருக்கு எந்தவித நோயறிகுறிகளும் இருக்காது, அதனால்தான் திரையிடல் பரிசோதனையைச் செய்துகொள்வது மிக முக்கியமாகும்.
உங்கள் பரிசோதனையில் HPV இருப்பதாகக் காட்டப்பட்டால், அந்த HPV கருப்பை வாய்ப்பகுதிப் புற்றுநோயாக மாறுவதற்கு வழமையாக 10 அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் எடுக்கும். ஒரு HPV நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதிப் புற்றுநோயாக மாறுவது அரிதாகும்.
பெண் இனப்பெருக்க அமைப்பின் வரைபடம்
உங்களுக்குக் கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை தேவையா?
பின்வருமாறு இருப்பின், உங்களுக்குக் கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை தேவை:
- ஒரு பெண்ணாக அல்லது கருப்பை வாய்ப்பகுதி உள்ள ஒரு நபராக இருத்தல்
- 25 முதல் 74 வயதினராக இருத்தல்
- பாலினம் அல்லது பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதாவது மற்றொரு நபருடன் பாலியல் தொடர்பு கொண்டிருத்தல்.
நீங்கள் HPV-க்குத் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட, பரிசோதனை ஒன்றைச் செய்து கொள்வது முக்கியமாகும். HPV தடுப்பூசி திறன்மிக்கதாக இருந்தாலும் கூட, அனைத்து HPV நோய்த் தொற்றுகளையும் அது தடுப்பதில்லை.
நீங்கள் எவ்வளவு அடிக்கடி கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்?
25-க்கும் 74-க்கும் இடைப்பட்ட வயதில், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனையைச் செய்துகொள்வது மிகவும் பாதுகாப்பானதாகும். ஏனென்றால், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சோதிக்கும் பழைய முறையானது (பாப் ஸ்மியர்), கருப்பை வாய்ப்பகுதியிலுள்ள உயிரணுக்களில் ஏற்படும் மாற்றத்தை மட்டுமே பரிசோதித்தது. புதிய கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை, கருப்பை வாய்ப்பகுதியிலுள்ள உயிரணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் HPV-ஐப் பரிசோதிக்கிறது. இது மாற்றங்களை முன்னதாகவே கண்டறிய உதவுகிறது.
கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை ஒன்றை நீங்கள் எங்கே செய்து கொள்ள முடியும்?
கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனைகள், மருத்துவரின் மருத்துவ நிலையங்கள், சுகாதார மையங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.
கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?
சுகாதார வழங்குநர் மாதிரி(sample) ஒன்றை எடுத்தால்
உங்கள் சுகாதார வழங்குநர் பரிசோதனையைச் செய்தால், உங்கள் இடுப்பிற்குக் கீழே உள்ள துணிகளைக் கழற்றிவிட்டு, உங்கள் முட்டிகளை (முழங்கால்களை) விலக்கியவாறு நீங்கள் மல்லாந்து படுக்க வேண்டும். உங்களை மூடிக்கொள்வதற்கு உங்களுக்கு ஒரு துண்டு வழங்கப்படும்.
ஒரு 'உடற்கூற்று உட்காட்டி'யை (speculum) (வாத்து அலகு போன்ற வடிவுடைய சாதனத்தை) மென்மையாக உங்கள் யோனிக்குள் நுழைத்து, உங்கள் கருப்பை வாயில் இருந்து உயிரணுக்களின் மாதிரி ஒன்றை எடுக்க ஒரு சிறிய பிரஷை அவர் உபயோகிப்பார். இது விசித்திரமான உணர்வை ஏற்படுத்தக்கூடும், ஆனால் வலிக்காது. நீங்கள் விரும்பினால், ஒரு பெண் சுகாதார வழங்குநர் வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
உங்கள் மாதிரியை நீங்களே எடுத்தால் (சுய சேகரிப்பு)
உங்கள் மாதிரியை நீங்களே எடுப்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதை நீங்கள் உங்கள் சுகாதார மையத்தில்தான் செய்ய வேண்டும். எப்படி இந்தப் பரிசோதனையைச் செய்வது என்பதை உங்கள் சுகாதார வழங்குநர் விளக்குவார். நீங்கள் அதைத் தனியாகச் செய்யலாம் அல்லது உதவிசெய்யுமாறு அவரைக் கேட்கலாம்.
சுய சேகரிப்பின்போது, உங்கள் யோனிக்குள் ஒரு பஞ்சுத் துடைப்பானை நுழைக்க வேண்டியிருக்கும். 10 முதல் 30 நொடிகளுக்கு அந்த பஞ்சுத் துடைப்பானை மெதுவாக வட்டமாகச் சுற்றவேண்டும். இது அசௌகரியமாக இருக்கலாம், ஆனால் வலிக்கக்கூடாது. பஞ்சுத் துடைப்பானை உங்கள் யோனியில் இருந்து வெளியே எடுத்து, கொடுக்கப்பட்ட உறையில் திரும்ப வைக்க வேண்டும்.
உங்கள் மாதிரியை ஒரு சுகாதார வழங்குநர் எடுப்பதைப் போலவே, சுயமாகச் சேகரிப்பதும் பாதுகாப்பானது மற்றும் துல்லியமானது.
உங்கள் பரிசோதனைக்குப் பிறகு என்ன நடக்கும்?
உங்கள் மாதிரி சேகரிக்கப்பட்டவுடன், பரிசோதனைக்காக அது ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
உங்கள் பரிசோதனையில் HPV கண்டறியப்படவில்லை என்றால், அடுத்த பரிசோதனைக்காக அடுத்த ஐந்து வருடங்களுக்குக் காத்திருக்கவும்.
உங்கள் பரிசோதனையில் HPV கண்டறியப்பட்டால், அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி உங்கள் சுகாதார வழங்குநர் உங்களிடம் பேசுவார். உங்கள் பரிசோதனை முடிவுகள் 'தேசிய புற்றுநோய் பரிசோதனைப் பதிவு' (National Cancer Screening Register - NCSR) -க்குச் செல்லும். இந்தச் சேவையானது, அடுத்து நீங்கள் எப்பொழுது பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என்ற நினைவூட்டல்களையும் உங்களுக்கு அனுப்பும்.
எப்பொழுது உங்கள் மருத்துவரைப் பார்ப்பது
உங்களது அடுத்த கருப்பை வாய்ப்பகுதித் திரையிடல் பரிசோதனை எப்பொழுது என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார வழங்குனரிடம் கேட்கவும்.
உங்களுக்கு யோனியில் அசாதாரணமான ரத்தப்போக்கு, வலி அல்லது திரவம் கசிதல் இருந்தால், உங்கள் மருத்துவரை உடனடியாகப் பாருங்கள். குறிப்பு, உங்களுக்கு இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சுயமாக சேகரித்தல் பரிந்துரைக்கப்படாது.
நீங்கள் ஏற்கனவே பெறாவிட்டால், HPV தடுப்பூசி குறித்து உங்கள் மருத்துவரைக் கேட்கவும்.
மேலும் தகவல்கள், ஆதார வளங்கள் மற்றும் குறிப்புகளுக்கு, இங்கே செல்லுங்கள் jeanhailes.org.au/health-a-z/health-checks/cervical-screening-test.
© 2024 Jean Hailes Foundation. All rights reserved. This publication may not be reproduced in whole or in part by any means without written permission of the copyright owner. Contact: licensing@jeanhailes.org.au