அனைத்து விதமான வயது மற்றும் பின்னணிகளில் இருந்து வரும் பெண்களுக்கும் திட்டமிடப்படாத கர்ப்பம் நிகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய பாதி கர்ப்பங்கள் திட்டமிடப்படாதவையாக இருக்கின்றன. தங்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதைச் சில பெண்கள் தெரிவு செய்கிறார்கள், மற்றவர்கள் கருக்கலைப்புச் செய்து தங்கள் கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தெரிவு செய்கிறார்கள்.
கருக்கலைப்பு என்றால் என்ன?
கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு பாதுகாப்பான மருத்துவச் செயல்முறையாகும். இது, 'முடிவுறச் செய்தல் (termination)' அல்லது 'கர்ப்பத்தை முடித்தல்' என்றும் குறிப்பிடப்படலாம். திட்டமிடப்படாத கர்ப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமானதா?
பதிவுசெய்யப்பட்ட மருத்துவ நிபுணர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது. ஆனால் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே கருக்கலைப்பு சட்டங்கள் வேறுபடும் (உதாரணமாக, எவ்வாறு மற்றும் எப்பொழுது பெண்கள் கருக்கலைப்பை அணுகலாம் என்பது குறித்த சட்டங்கள்).
கருக்கலைப்புக்கான காரணங்கள்
கருக்கலைப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இது ஒரு கடினமான முடிவாக இருக்கலாம். நீங்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதைத் தெரிவு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காரணங்களைப் பொருட்படுத்தாமல், உங்கள் கர்ப்பத்தை நீங்கள் முடிவுறச் செய்ய விரும்பினால், அது உங்களுடைய தேர்வாகும்.
கருக்கலைப்பு வகைகள்
கருக்கலைப்பில் இரண்டு வகைகள் உள்ளன: மருத்துவக் கருக்கலைப்பு மற்றும் அறுவை சிகிச்சைக் கருக்கலைப்பு. இரண்டுமே பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் கொண்டவை.
மருத்துவக் கருக்கலைப்பு
மருத்துவக் கருக்கலைப்பு என்பது, கருச்சிதைவை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மாத்திரைகளை உட்கொள்வதாகும். கர்ப்பத்தின் ஒன்பது வாரகாலம் வரை இந்த முறையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
நீங்கள் மருத்துவக் கருக்கலைப்பைச் செய்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பல மணிநேரம் கடுமையான வயிற்றுத் தசைப்பிடிப்பு இருக்கும், ஆனால் கருச்சிதைவு முடிந்தவுடன் வலி குறைய ஆரம்பிக்கும். உங்களுக்கு உதவும் வகையில் வலுவான வலிநிவாரண மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். நீங்கள் வீட்டிலேயே இதை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும்.
அறுவை சிகிச்சைக் கருக்கலைப்பு
நீங்கள் ஒன்பது வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால், அல்லது மருத்துவக் கருக்கலைப்பைச் செய்து கொள்ள விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்புச் செய்து கொள்வதை நீங்கள் தெரிவு செய்யலாம்.
அறுவை சிகிச்சைக் கருக்கலைப்பு, பொதுவாக ஒரே நாளில் செய்யப்படுகிறது.
உங்களுக்கு பொதுவான மயக்கமருந்து கொடுக்கப்பட்டு (நீங்கள் தூக்கத்தில் இருக்கும் போது) அறுவை சிகிச்சைக் கருக்கலைப்புச் செய்யப்பட்டால் , நீங்கள் எந்தவித வலியையும் அனுபவிக்க மாட்டீர்கள். ஆனால், அதன் பின்னர் சில நாட்களுக்கு வயிற்றுத் தசைப்பிடிப்பு இருக்கலாம். உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தை மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக் கருக்கலைப்புச் செய்யப்பட்டால், கருக்கலைப்பின் போது நீங்கள் இலேசான அல்லது வலுவான வயிற்றுத் தசைப்பிடிப்பு வலியை அனுபவிக்கக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கு, மாதவிடாயின் போது ஏற்படுவதைப் போன்ற வயிற்றுத் தசைப்பிடிப்பு மற்றும் வலி இருப்பதும் இயல்பானது.
வலியில் இருந்து விடுபட நீங்கள் சூடான பை, வலி நிவாரண மருந்துகள் மற்றும் ஓய்வை எடுக்கலாம்.
உங்களுக்கு தீவிர வலி இருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
நீங்கள் எப்போது சாதாரண செயற்பாடுகளுக்கு மீண்டும் திரும்பலாம்?
நீங்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நன்றாக உணரும் பட்சத்தில், கருக்கலைப்புச் செய்த மறுநாளே நீங்கள் இயல்பான செயற்பாடுகளுக்குத் திரும்பலாம். ஆனால், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, நீங்கள் பின்வருபவற்றைத் தவிர்க்க வேண்டும்:
- கனமானவற்றைத் தூக்குதல், உடல் ரீதியான வேலை மற்றும் கடுமையான செயற்பாடுகள்
- உடலுறவு கொள்ளுதல், மாதவிடாய்க்கான பஞ்சுத்தக்கைகளை (tampons) பயன்படுத்துதல், அத்துடன் உங்கள் யோனியில் எதையேனும் செருகுதல்
- குளியல் தொட்டியில் குளித்தல் அல்லது நீந்தச் செல்லுதல்.
பொதுவான உணர்ச்சிபூர்வமான அறிகுறிகள் பின்வருமாறு:
- மனநிலை மாற்றங்கள்
- மறதி
- படபடப்பு.
கருக்கலைப்பு ஒன்றிற்கு எவ்வளவு செலவாகும்?
கருக்கலைப்புக்கான செலவு பின்வருபவற்றைப் பொறுத்தது:
- கருக்கலைப்பு வகை
- உங்கள் கர்ப்பத்தின் நிலை
- நீங்கள் கருக்கலைப்புச் செய்துகொள்ளும் இடம் (எ.கா. பொது அல்லது தனியார் மருத்துவமனை)
- நீங்கள் Medicare-க்கு தகுதியுடையவரா என்பது
- உங்களிடம் தனிப்பட்ட சுகாதாரக் காப்பீடு இருக்கிறதா என்பது
உங்களிடம் Medicare அட்டை இருந்து தனியார் மருத்துவ நிலையம் ஒன்றிற்குச் சென்றால்:
- மருத்துவக் கருக்கலைப்புக்கு $100 முதல் $500 வரை செலவாகக்கூடும்
- அறுவை சிகிச்சைக் கருக்கலைப்புக்கு $400 முதல் $600 வரை செலவாகக்கூடும்.
சில மருத்துவ நிலையங்கள் அல்லது பொது மருத்துவமனைகளில் குறைந்த கட்டணம் இருக்கலாம். நீங்கள் தகுதி பெற்றிருந்தால், கட்டணம் ஏதும் இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மருத்துவரால் உங்களுக்கு மேலும் தகவல்களை வழங்க முடியும்.
கருக்கலைப்பைச் செய்து கொள்ள உங்களுக்குப் பரிந்துரை தேவையா?
சட்டபூர்வமாகத் தேவைப்படுவதால் மேற்கு ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற இடங்களில் கருக்கலைப்புக்கு முன்பதிவு செய்ய உங்கள் மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை.
கருக்கலைப்பு செய்வதற்கு முன் உங்களுக்கு ஆலோசனை தேவையா?
நீங்கள் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் யாரிடமாவது பேச விரும்பினால் அல்லது உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால் ஆலோசனை கிடைக்கும்.
மேலும் தகவல்கள்
உங்கள் மருத்துவர் அல்லது உள்ளூர் பெண்கள் சுகாதார மையம், பாலியல் நலம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவை மையம் அல்லது பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவினர் மருத்துவ சேவை ஆகிய இடங்களில் கருக்கலைப்பு குறித்து மேலும் விவரங்களை நீங்கள் பெறலாம்.
இந்த நம்பகமான நிறுவனங்களில் இருந்தும் கூட நீங்கள்தகவல்களைப் பெறலாம்:
MSI Australia (முன்னர் Marie Stopes Australia)
1800MyOptions (விக்டோரியா)
Children by Choice (குயின்ஸ்லாந்து)
Pregnancy Choices Helpline (நியூ சவுத் வேல்ஸ)
Pregnancy Advisory Centre (தென் ஆஸ்திரேலியா)
மேலும் தகவல்கள், ஆதார வளங்கள் மற்றும் குறிப்புகளுக்கு, இங்கே செல்லவும் jeanhailes.org.au/health-a-z/sex-sexual-health/abortion.
© 2024 Jean Hailes Foundation. All rights reserved. This publication may not be reproduced in whole or in part by any means without written permission of the copyright owner. Contact: licensing@jeanhailes.org.au